Wednesday 28 December 2011

பெரியம்மா வீடு


என் அம்மா சொல்வதையெல்லாம் நான் செய்யாவிட்டாலும் என் பெரியம்மா சொல்வதை நான் ஒருபோதும் செய்யமால் விட்டது கிடையாது. பெரியம்மாதான் எனது பாட்டனார் குடும்பத்தில் மூத்தவர். பெரியம்மாவிற்குப் பின்னர் மாமாக்கள் மூவர் பிறந்த போதும் பாட்டனாருக்குப் பிறகு பெரியம்மாதான் குடும்பத்திலே ஒரு தலைவன் மாதிரி செயல்பட்டார். பெரியம்மா வீடும் எங்கள் வீடும் அடுத்தடுத்த காணிகளுக்குள் அமைந்திருந்தபோதிலும் எனக்கென்னவோ பெரியம்மா வீடுதான் எங்கள் வீடுபோல் இருந்தது. என் அம்மா சிறிது முன்கோபக்காரி. வந்தோரை வரவேற்று உபசரிப்பதிலும், அவர்கள் முகம் கோணாமல் நடப்பதிலும் பாட்டனாரைப்போல் என் அம்மாவை விட பெரியம்மாதான் கெட்டிக்காரி. 
எங்கள் வீட்டைச் சுற்றிப் பெரிதாக மரங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் பெரியம்மா வீட்டைச்சுற்றி நாலு புறமும் பெரிய மாமரங்கள் இருந்தன. முற்றத்தான், சின்னக்கண்டான், அடுப்படிக் கோடியான், நடுவளவான் என்று அவைகள் நிற்கும் இடங்களைக் கொண்டே அவற்றிற்குப் பெயர்களும் வைக்கப்பட்டிருந்தன.
மாமரங்கள், பலா மரங்கள், வேப்ப மரங்கள், தென்னை மரங்கள் இன்னும் பெயர் தெரியாத பல மரங்களும் அங்கே இருந்தன. பெரியப்பா குருநாகல் என்ற இடத்தில் சிறு வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அங்கே இருக்கும் பல பல மர வகைகளையும் அவ்வப்போது வரும்போது கொண்டு வந்து நாட்டிவிடுவார். அவைகள் எல்லாம் வளர்ந்து ஒரு சோலை போன்றே காட்சியளித்தன.
பெரியம்மாவின் மூத்த அண்ணா பெரியப்பா போல் நல்ல உயரமாக இருப்பார். எங்கள் சிறுவர் குழுவுக்குத் தலைவரும் அவர்தான். யாரும் ஏதாவது தவறு செய்தால் தலையில் குட்டுப் போடவும் தயங்கமாட்டார். தீபாவளி, தைப்பொங்கல், புதுவருடப்பிறப்பு என்று விடுமுறை நாட்கள் வரும்போது, சிறுவர்களாகிய நாம் எல்லோரும் சேர்ந்து அண்ணா தலைமையில் அந்தச் சோலைகளில் காலை முதல் மாலை வரை ஒரே விளையாட்டுத்தான். அதை இப்போது நினைத்தாலும் ஆனந்தமாவே இருக்கும்.
எனது தம்பி ஒரு மாதிரியானவன். யார் சொல்லும் கேட்க மாட்டான். காலையில் பல் துலக்குவது தொடக்கம், பாடசாலைக்குப் புறப்படுவது, பாடசாலைக்குச் செல்வது, பாடங்களைப் படிப்பது, வீட்டு வேலைகள் செய்வது என்றால் அம்மாவிற்குப் போதும் போதும் என்றாகிவிடும். இவையெல்லாவற்றையும் பெரியம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்றால் படபடவென்று எல்லா வேலைகளையும் தானாவே செய்து முடித்துவிடுவான். ஆனால் சாப்பாடு என்றால் மட்டும் யாரும் சொல்லத் தேவையில்லை. எல்லோருக்கும் முதலிலே வந்து குசினிக்குள் அமர்ந்துவிடுவான்.
இவற்றிற்கெல்லாம் இன்னொரு காரணமும் இருந்தது. எனது அப்பா நான் இரண்டு வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். அப்போது எனது தம்பி அம்மாவின் வயிற்றில் நான்கு மாதப் பாலகனாக வளர்ந்துகொண்டிருந்தான். அப்பா இல்லாத பிள்ளை என்று என்னைவிட தம்பியைத்தான் எல்லோரும் அன்பாக நேசித்தார்கள். அவனது குறும்புகளுக்கும், சோம்பேறித் தனங்களுக்கும் அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
அவர்கள் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. எங்கள் வீட்டு விடயங்களும் பெரியம்மாவின் மேற்பார்வையில்தான் தினமும் நடைபெற்றுக் கொண்டு வந்தன. என் அம்மாவிற்கு சில வேளைகளில் இவை பிடிக்காத போதிலும் நேரடியாகப் பெரியம்மாவிற்குச் சொல்லத் துணிவு இல்லை.
எங்கள் வீட்டில் அப்பா இல்லாததால் பெரியம்மாவின் அண்ணாவுடன் சேர்ந்து நானும், எனது தம்பியும் பெரியப்பாவிடமும், பெரியம்மாவிடமும் தந்தை, தாய் பாசத்தைப் பெற்றோம் என்றுதான் கூறவேண்டும். இவையெல்லாம் எமக்குத் தெரியாத வயதிலிருந்தே பழக்கப்பட்டுவிட்தொன்று. இரவு வேளைகளில் அம்மாவும் தம்பியும் எங்கள் வீட்டிலும், நான் அண்ணாவுடன் சேர்ந்து பெரியம்மா வீட்டிலேயும்தான் படுப்பேன். இதுவும் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டுவிட்டதொன்று.
இளமையிலே விதவையாகிவிட்ட எனது அம்மாவிற்கு தனது மனைவியை இழந்த எமது தூரத்துச் செந்தக்காரர் ஒருவரை எமது பாட்டனார் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வைத்தார்.
அதன் பிறகு சிறிதாக இருந்த எமது வீட்டில் எல்லோரும் இரவு வேளைகளில் படுத்துத் தூங்குவதற்கு வசதிப்படவில்லை. சிறிது காலத்தில் எனது தம்பியும் இரவு வேளைகளில் தூங்குவதற்காக என்னுடன் பெரியம்மா வீட்டிற்கே வந்துவிட்டான்.
காலமும் ஓடிக்கொண்டே இருந்தது.
பெரியம்மாவிற்கு மூன்று பிள்ளைகள். அண்ணாவும், ஒரு தம்பியும், ஒரு தங்கையும் இருந்தார்கள். சிறிது காலத்தின் பின்னர் அண்ணா மேற் படிப்பிற்காக இலண்டன் சென்றுவிட்டார். தம்பி படித்துக்கொண்டிருந்தான். எனது குறும்புக்காரத் தம்பியும் படித்துக்கொண்டிருந்தான். ஒரு வயது வந்ததும் திடீரென அவனிலே மாற்றங்கள் வரத்தொடங்கின. புதுப்புது நாகரீக உடைகளும், வாசனைப் பொருட்களும் கடன் வாங்கியாவது அணியவேண்டும் என்று விரும்புவான். சித்தப்பாவிடமும், அம்மாவிடம் அதற்குரிய பணவசதிகள் இருந்திருக்கவில்லை. அப்படியான வேளைகளில் உடனே பெரியம்மாவிடம் சென்று எப்படியோ பணம் வாங்கி விரும்பியவற்றை வாங்கிவிடுவான்.
'நீ வளர்ந்து உத்தியோகம் பார்க்கும்போது முதல் மாதச் சம்பளத்திலே எனக்கு ஒரு சேலை வாங்கித் தரவேண்டும்' என்று பெரியம்மா ஒருமுறை சொன்னார். அதன் பிறகு எப்போது பணம் வேண்டும் என்றாலும் பெரியம்மாவிடம் சென்று 'நான் படித்து உத்தியோகம் பார்த்து முதல் மாதச் சம்பளம் வாங்கியதும் உங்களுக்கு ஒரு புதுச்சேலை வாங்கித் தருவேன்'. ஆனால் எனக்கு இப்போது நீங்கள் பணம் தரவேண்டும் என்று கேட்பான். பெரியம்மாவும் சிறிதாகச் சிரித்துவிட்டு பணத்தை எடுத்துக் கொடுப்பார்.
வாலிபப் பருவத்தில் எனது தம்பி என்னைவிட உயரமாகவும், அழகாகவும் இருந்தான். அவன் எமது தந்தையைப் போல் இருக்கிறான் என்றே எல்லோரும் கூறினார்கள். இரண்டு வயதாக இருந்தபோதே தந்தையைப் பறிகொடுத்த என்னால் அவரின் முகத்தைக் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியவில்லை. தம்பியைப் பார்க்கும்போது இப்படியா என் தந்தை இருந்தார் என்று எண்ணி ஆச்சரியமும், ஆனந்தமும் அடையும் வேளையில் அவர் எம் கண்முன்னே இல்லையே என்ற ஆதங்கமும் மனதை வாட்டாமல் இல்லை.
என்னால் சிறுவயதிலிருந்தே நன்றாகப் படிக்க முடியவில்லை. கவனிப்பார் அற்றுக் கிடந்த எனது அம்மாவின் சீதணக் காணியில் விவசாயம் செய்யலாம் என்று எண்ணி ஆரம்பித்தேன். இளைஞனாகிய நான் அவ்வளவாகப் படிக்காது விட்டாலும், படித்த அறிவைக் கொண்டு புதிய புதிய முறைகளைக் கையாண்டேன். எனக்கு விவசாயத்திலே நல்ல வருமானம் வரத் தொடங்கியது. ஓரிரு வருடங்களில் எமது காணிக்குப் பக்கத்திலிருந்த காணியையும் வாங்கித் திருத்தி விவசாயம் செய்தேன். அதற்குள் ஒரு அழகான வீட்டையும் கட்டுவித்தேன்.
எனது தம்பியும் நன்றாகப் படித்து அரசாங்கத்தில் ஒரு வேலை எடுத்துக் கொண்டு வெளியூருக்குப் போய்விட்டான். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அவனது முதல் மாதச் சம்பளம் பெற்றவுடன் எமது அம்மாவிற்கும், பெரியம்மாவிற்கும் இரண்டு புதிய சேலைகள் வாங்கிக்கொண்டு வந்தான். அம்மாவினது சேலையைவிடப் பெரியம்மாவினது சேலையே மிகவும் அழகாக இருந்தது. இதனைக் கண்ட பெரியம்மா தனக்குக் கொடுத்த சேலையை மாற்றி எனது அம்மாவிற்குக் கொடுக்கும்படி தம்பியிடம் கூறி அப்படியே செய்தும் விட்டார். எதனையும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் பெரியம்மாவிடம் நிறைந்திருந்தது.
பெரியம்மாவின் அண்ணா இலண்டன் சென்றபின்னர் நானும் பெரியம்மாவின் தம்பியும், பெரியம்மாவின் தங்கச்சியும்தான் எங்கள் வீடுகளில் இருந்தோம். தங்கச்சிக்கு ஒன்பது வயதுதான். அப்போதுதான் நாட்டுப் பிரச்சனை ஆரம்பமாகியது. சிறிய அளவிலே தொடங்கிய பிரச்சனைகள் நாளுக்கு நாள் பெரிது பெரிதாக வளர்ந்து நாட்டில் கொலைகளும், கொடூரங்களும், அழிவுகளும், அட்டூழியங்களும் அதிகரித்துக்கொண்டே சென்றன.
அப்பாவி இளைஞர்களை வேட்டையாடும் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெரியம்மாவின் தம்பியும், தங்கையும் வெளி நாட்டுக்குச் செல்ல எண்ணி அதற்காக வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். எனக்குள் இனந்தெரியாத கலக்கம் ஆரம்பித்தது. இளவயதிலே ஒன்றாக ஓடித்திரிந்து விளையாடிய நாட்களெல்லாம் என் மனக்கண்களின் முன்னால் வந்து நின்றன. வளர்ந்ததும் ஒவ்வொருவராகப் பிரிந்து வேறு வேறு இடங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று தமது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.
எனக்கென்னவோ நாம் பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டு வெளியேற விருப்பம் இல்லாமலே இருந்தது. பெரியம்மாவும் இப்போது தனித்துவிட்டார். அவருக்குத்துணையாக அருகில் யாரும் இல்லையே என்ற ஆதங்கமும் என்னை அங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்தது.
நான் திருமண வயதை அடைந்ததும் எனது சொந்த மைத்துனியைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்டார்கள். நானும் எதுவித மறுப்பும் சொல்லாமல் அதற்குச் சம்மதித்தேன். இருவருமாகச் சேர்ந்து நடாத்திய இல்லற வாழ்விலே ஓர் ஆண் மகனும், இரண்டு பெண்களும் எமக்குக் கிடைத்தார்கள். அந்தச் சந்தேசத்திலே கடந்த கால நினைவுகளைச் சிறிது காலம் மறந்திருந்தேன்.
அமைதி காக்கவென்று இந்திய மண்ணிலிருந்தும் இராணுவம் கொண்டுவரப்பட்டது. சில மாதங்கள் அமைதியாக இருந்தவர்கள் பின்னர் செய்த கொடுமைகளை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.
நடு ராத்திரி வேளைகளில் இராணுவ முகாம்களிலிருந்து 'செல்கள்' வீசுவார்கள். அது எங்கு சென்று விழுந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை. ஒவ்வொரு முறையும் வீசும் பேதும் அது சென்று அடர்ந்த காட்டை அழித்தாலும், ஆசையாக நட்ட மரத்தை அழித்தாலும், கட்டியிருந்த வீட்டு விலங்குகளை அழித்தாலும், ஆயிரங்காலமாக இருந்த கோட்டையை அழித்தாலும், வாழ்நாள் முழுக்கச் சேர்த்துக் கட்டிய வீட்டை அழித்தாலும், வீட்டிலுள்ள அத்தனை பேரையும் அழித்தாலும் அழிவு தமிழருக்குத்தான், தமிழ் மண்ணுக்குத்தான்.
ஒரு நாள் இரவு பத்து மணியிருக்கும் பெரியம்மா வீட்டில் தனித்திருந்தபோது திடீர் திடீர் என்று சப்பாத்துச் சத்தங்கள் கேட்டன. தனியே படுத்திருந்த பெரியம்மா படுக்கையைவிட்டு எழுந்து இருளிலே அமர்ந்திருந்தார். பன்னிரண்டு போராளிகள் ஒரு போராளியை ஒரு கட்டிலில் வைத்துச் சமந்துகொண்டு வந்து பெரியம்மாவின் வீட்டு முற்றத்தில் வைத்துவிட்டுக் கதவைத் தட்டினார்கள்.
'அம்மா, நாங்கள்தான் வந்திருக்கின்றோம் பயப்படாமல் கதவைத் திறவுங்கள்' என்று கூறினார்கள். பெரியம்மா கதவைத் திறந்தார். கட்டிலில் தூக்கி வந்த போராளியின் வயிற்றில் பெரிய காயம். அரைவாசி உயிர் போய்விட்டது. இதனைக் கண்ட பெரியம்மா ஓடித் திரிந்து தன்னிடம் இருந்த மருந்துகளை எடுத்துக் கொடுத்தார். எந்த மருந்தாலும் அந்தப் போராளியைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
அதன் பிறகுதான் அந்தப்போராளி தனது இனந்தவரின் பிள்ளை என்பதை பெரியம்மா அறிந்துகொண்டார். உடனே என்னை அங்கு வரும்படி ஒருவரை அனுப்பினார். எனக்கு நடந்தவைகளை எடுத்துக் கூறினார். மறுநாள் விடிந்ததும் அந்தப் போராளியின் இறுதிக் கிரியைகள் பெரியம்மாவின் வீட்டிலேதான் நடத்தப் போகிறோம் என்று போராளிகள் கூறினார்கள். அவர் அதனைப் பூரண சம்மதத்துடன் ஏற்றுக்கொண்டடார்.
பெரியம்மாவின் வீட்டிற்குப் பின்னால் ஒரு பெரிய திறந்த வெளி இருந்தது. யாரும் வந்தால் தூரத்தில் இருந்தே பார்த்து விடலாம். அதுவும் ஒரு காரணம். இறந்த போராளி ஓர் இந்துவாக இருந்தபடியினால் இந்து முறைப்படி எல்லா கிரியைகளையும் அங்கே செய்தார்கள். சுமார் ஆறு மணித்தியாலங்கள்வரை அங்கே எல்லாக் காரியங்களும் நடைபெற்றன. கிரியைகள் முடிந்தபின் மரியாதை செலுத்துபவர்கள் எல்லாம் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அந்த வீரச்சாவடைந்த போராளியின் உடலோடு அவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள்.
இப்படி இங்கே நடக்கின்றதென்று எப்படியோ இராணுவத்திற்குத் தகவல் போய்விட்டது. இராணுவத்திற்குத் தகவல் போய்விட்டது என்று எமது கிராம சேவகருக்கும் தகவல் போய்விட்டது. அவர் உடனே ஒருவரைப் பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி விடயத்தைச் சொல்லிவிட்டார்.
'பெரும்பாலும் இராணுவ அதிகாரிகள் உவ்விடம் வருவார்கள்' என்று சொல்லியனுப்பினார்.
இதனைக் கேள்வியுற்றவுடன் நானும் பெரியம்மாவும் சேர்ந்து அங்கு நடந்த கிரியைகளுக்கு எதுவித தடயங்களும் இல்லாது அகற்றினோம். தூரத்தே இராணுவ வாகனம் வருவதைக் கண்டதும் பெரியம்மா அந்தச் சோலை வளவின் பின் கரையிலே சென்று ஏதோ வேலை செய்வதுபோலப் பாவனை செய்துகொண்டிருந்தார்.
போராளிகளைக் கையும் களவுமாகப் பிடிக்கலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வந்த இராணுவத்தினருக்கு ஒரே ஏமாற்றம். வீட்டிற்குள்ளும், வீட்டைச் சுற்றியும் பல தடவைகள் சுற்றிச் சுற்றி ஏதாவது தடயங்கள் கிடைக்கின்றனவா என்று தேடினார்கள். எதுவுமே கிடைக்கவில்லை. நான் எனது வீட்டிலிருந்து வேலை செய்வதுபோல் பாசாங்கு செய்துகொண்டிருந்தபோதும் பெரியம்மா வீட்டில் இராணுவத்தினர் என்ன செய்கின்றார்கள் என்றே இரகசியமாகக் கவனித்துக்கொண்டிருந்தேன்.
வீட்டைச் சுற்றிப்பார்த்த இராணுவத்தினர் பெரியம்மா இருந்து வேலை செய்துகொண்டிருந்த இடத்திற்குப் போவது தெரிந்தது. எனக்கு நெஞ்சு படபடத்துக்கொண்டே இருந்து. பத்து நிமிடமளவில் இராணுவத்தினர் பெரியம்மாவுடன் பேசிக்கொண்டேயிருந்தனர். எனக்கு அந்தப் பத்து நிமிடங்களும் பத்து வருடங்கள் போல் இருந்தது. அவர்கள் எப்போது பெரியம்மாவை விட்டுவிட்டுப் போவார்கள் என்றிருந்தது. ஆனால் பெரியம்மாவோ அவர்களுடன் சிரித்துக் கதைப்பது தெளிவாகத் தெரிந்தது. அதன் பின்னர் அவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள்.
அவர்கள் போனபின்னர் நான் ஓடிச்சென்று பெரியம்மாவிடம் அவர்கள் என்ன கேட்டார்கள், நீங்கள் என்ன பதில் கூறினீர்கள் என்று மூச்சுவிடாமல் கேட்டேன். அவர் சாதாரணமாக 'நான் வீட்டுக்காரி பயப்படாமல் இருக்கிறேன் நீ ஏன் பயந்து உயிரை விடுகிறாய்?' என்றார்.
'அம்மா நீங்கள் தனியாகவா இந்த வீட்டில் இருக்கிறீர்கள்? உங்கள் பிள்ளைகள் எல்லாம் வெளி நாட்டிலா? அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் எப்போது வருவார்கள்? அவர்கள் உங்களுக்கு எனக்னென்ன பொருட்கள் அனுப்பினார்கள்? என்று கேட்டார்கள்.
நான் எல்லாவற்றிற்கும் பதில் கூறவில்லை. ஆனால் 'அவர்கள் அனுப்பிய பொருட்களையெல்லாம் நீங்கள்தானே அவ்வப்போது வந்து எடுத்துக்கொண்டு போயிவிட்டீர்கள். பிறகு ஏன் என்னைக் கேட்கின்றீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'எங்களுக்கு வெளிநாடுகளில் ஒருவருமில்லை அதனால்தான் இங்கே வந்து எடுத்துக்கொள்கிறோம்' என்று கூறிச் சிரித்தார்கள்'. என்றார்.
பெரியம்மாவின் துணிச்சல் இதுவரையில் எனக்கு வரவில்லை.
இவை நடந்து சில வாரங்கள் ஆனபின்னர் ஒருநாள் மத்தியானம் எனது பிள்ளைகள் அருகிலிருந்த கூடலான மரங்களுக்கிடையில் விழுந்து வெடித்த 'செல்களின்' சில பகுதிகளை எடுத்துவந்து மற்றைய சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்கள். திடீரென எங்கிருந்தோ இராணுவ வாகனம் வந்து என் வீட்டில் முன்னால் நின்றது.
'நீ புலிகளின் ஆதரவாளனா? நீ அவர்களுக்கு உளவு சொல்பவனா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எங்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்தைக் காட்டு' என்று கேட்டார்கள்.
நான் 'எனக்கு எதுவும் தெரியாது' என்று கூறினேன்.
'இந்தச் செல்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?' என்றான் இன்னொருத்தன்.
'நீங்கள்தானே அவற்றை ஏவினீர்கள். அவைகள் அந்த மரங்களுக்குள் விழுந்து கிடந்தன' என்றேன்.
இப்படிக் கதைத்துக் கொண்டு நிற்க இன்னொரு இராணுவத்தினர் ஒரு சுருக்குக் கயிற்றை என் கழுத்தில் போட்டு மாடுகளை இழுப்பதுபோல் இழுத்தான். இன்னொருவன் எனது இரண்டு கைகளையும் ஒன்றாகச் சோர்த்து இன்னொரு கயிற்றால் கட்டினான். எதிர்பாராத இந்தச் செயலால் திகைத்த நான் செய்வதறியாது 'எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு எதுவும் தெரியாது' என்று சொல்லிக்கொண்டேயிருந்தேன். ஒருவன் கழுத்தில் போட்ட கயிற்றை இழுக்க இன்னொருவன் இன்niனாரு கயிற்றால் எனக்கு முதுகில் அடித்தான்.
நான் கயிற்றால் அடித்த வலி தாங்க முடியாது ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டேன். எப்படி அழைத்தேனோ தெரியாது இடையே பெரியம்மா! என்று உரத்துச் சத்தமிட்டேன். தனது வீட்டில்
மதியவேளை உணவருந்திவிட்டுச் சாய்வு நாற்காலியில் சிறு தூக்கம் போட்டுக்கொண்டிருந்த பெரியம்மா, என் கூக்குரலைக் கேட்டவுடன் திடீரென எழுந்து எங்கள் வீட்டிற்கு ஓடி வந்துவிட்டார். எனது நிலையைக் கண்டதும் அவருக்கும் அழுகை வந்துவிட்டது.
'என்ரை பிள்ளையை அவிழ்த்து விடுங்கள், அவனுக்கு ஒன்றும் தெரியாது. அவனுக்கு யாரும் ஒன்றும் செய்யக்கூடாது. அவன் ஒரு அப்பாவி' என்று கூறிக்கொண்டு வந்து எனது கழுத்துக் கயிற்றில் பிடித்திருந்த இராணுவத்தின் கையில் பிடித்து இழுத்து அந்தக் கயிற்றைப் பறித்தார். இதனைக் கண்ட இன்னொரு இராணுவம் பெரியம்மாவைப் பிடித்துத் தள்ளி விட்டான். அவர் போய் ஒரு பள்ளத்துள் கால் இடறுப்பட வீழ்ந்தார். வீழ்ந்தவர் நிலத்தில் இருந்த மண்ணை இரு கைகளினாலும் அள்ளி எடுத்து 'நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம்? ஏன் இங்கே வந்து இப்படிச் செய்கிறீர்கள்? உங்களுக்கு சகோதரர்கள், பெற்றோர்கள் யாருமில்லையா? நீங்கள் எல்லோரும் மண்ணோடு மண்ணாகப் போக' என்று திட்டினார்.
இவற்றைப் பார்த்துக்கொண்டு நின்ற இராணுவ உயர் அதிகாரிக்கு மற்றைய இராணுவத்தினர் செய்த செய்கை அநாகரீகமாகப் பட்டதோ, அல்லது பூமித்தாயின் மண்ணை அள்ளித் திட்டியது அச்சத்தைக் கொடுத்ததோ என்னவோ உடனே கயிற்றை அவிழ்த்து விடுமாறு பணித்தார்.
எல்லோரையும் இராணுவ வாகனத்தில் ஏறுமாறும் பணித்தார்.

'இனிமேல் இங்கே போராளிகள் யாராவது வந்தால் உடனே எங்களுக்குச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் எல்லோரையும் பிடித்துக்கொண்டு போய்விடுவோம். பிறகு விடவே மாட்டோம்' என்று ஒரு மிரட்டல் தோரணையில் கூறிவிட்டுப் போய்விட்டார்கள்.
இது முன்னர் பெரியம்மாவின் வீட்டில் நடந்த நிகழ்வின் எதிரொலி என்றே எனக்குப்பட்டது. அன்று ஏமாந்துவிட்டார்கள். அதற்குப் பழி வாங்கவே இப்படியாக ஏதோ ஒரு சாட்டைச் சொல்லிக்கொண்டு வந்து எனக்கு அடித்தார்கள். அன்று பெரியம்மா வீட்டில் நடந்தவை எனக்குத் தெரியாமல் நடந்திருக்காது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் அதற்குரிய ஆதாரங்களை அவர்களால் எடுக்க முடியவில்லை. அதற்காகப் பெரியம்மாவிற்கு அடிக்கவோ, கயிற்றால் கட்டவோ அவர்களால் முடியவில்லை. அவர் வயதானவர். அதனால்தான் என் வீட்டிற்கு வந்து இப்படிச் செய்தார்கள்.
அன்று அவர்கள் எனது கழுத்தில் கயிற்றால் கட்டி இழுத்தபோது பெரியம்மா வந்திருக்காது விட்டிருந்தால் நான் மூச்சுத்திணறி உயிர் விட்டிருக்கவும் கூடும். இப்படிப் பலரை இராணுவத்தினர் பலர் முன்னிலையில் பரிதாபமாகக் கொன்றிருக்கிறார்கள் என்றும் பின்னர் அறிந்தோம். இளைஞனான என்னால் கூட இராணுவத்தினரை எதிர்க்க முடியாதபோது அறுபது வயதைத் தாண்டிய பெரியம்மாவினால் எப்படி எதிர்த்துப் போராட முடிந்தது?
எனக்கு உயிர் கொடுத்த பெரியம்மா இப்போது இங்கே இல்லை. பெரியப்பாவும் சில வருடங்களுக்கு முன்னர் திடீரென்று இறந்துவிட்டார். அதன் பிறகு அவர் தனது மகளுடன் வசிப்பதற்காகக் கனடாவிற்குச் சென்றுவிட்டார். இவை நடந்து இப்போது ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் இருந்த வீட்டில் இடம்பெயர்ந்த வேறு யாரோ வசிக்கின்றார்கள். எப்போது அவர்கள் வீட்டுப் பக்கம் திரும்பினாலும் அங்கே பெரியம்மா எங்கள் வீட்டைப் பார்த்துக்கொண்டு நிற்பதுபோல் ஓர் உணர்வே என்னுள் ஏற்படுகின்றது. அவர் மீண்டும் இங்கே வரவேண்டும் என்று என்னுள் ஓர் ஆவல் தூண்டுகிறது. அது நடைமுறையில் சாத்தியமாகுமா?
அவருக்கு உடல் நலமில்லையென்று சிறிது நேரத்திற்கு முன்னர் தொலைபேசி அழைப்பு வந்த நேரம் தொடக்கம் என்னால் இருப்புக் கொள்ளக்கூட முடியவில்லை. அவர் நினைவாகவே இருக்கின்றது. அவருடன் கழித்த நாட்கள் மீண்டும் மீண்டும் நினைவில் வந்துகொண்டே இருக்கின்றன. அவரைக் காணவேண்டும், அவருடன் பேசவேண்டும், அவரைக் கட்டியணைக்க வேண்டும்போல் இருக்கின்றது. அவர் இன்னும் பல ஆண்டு காலம் நோய் நொடியில்லாது வாழவேண்டும் என்று இறைவனிடம், அருகிலிருக்கும் எங்கள் குலதெய்வத்தை வேண்டுகிறேன்.
அவருக்கு ஏதும் நடக்கக்கூடாதது நடந்துவிட்டால்கூட எனக்கு அம்மாவாக, அப்பாவாக, ஒரு வழிகாட்டியாக, உயிர் காத்த தெய்வமான பெரியம்மா என்றும் என்னிதயத்தின் ஓர் தனியிடத்தில் எப்போதும் இருப்பார். இது உண்மை!

No comments:

Post a Comment